Sunday, 13 October 2019

முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்......

முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்......

நீண்ட, அடர்த்தியான, கரு கருவென இருக்கும் கூந்தலை விரும்பாதவர் எவரேனும் உண்டோ?.

ஆனால் நடப்பதோ எதிர் மறையானது . முடி உதிர்வு......

முடி உதிர்வதற்கு பல காரணங்களை சொல்கின்றனர். தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, டென்ஷன், பலவிதமான ஷாம்புகளை உபயோகிப்பது, நிறைய மாத்திரைகளை சாப்பிடுவது என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த முடி உதிர்வதை வீட்டில் எளிதாக கிடைக்கும் சில பொருட்களை வைத்து, ஒரு எண்ணெய் தயாரித்து உபயோகித்து ஓரளவு சரி செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்...

தேங்காய் எண்ணெய் - 100ml
செம்பருத்தி பூ - நான்கு
செம்பருத்தி இலை - பத்து
மருதாணி இலை - சிறிது
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, மருதோன்றி, வெந்தயம் அனைத்தையும் ஒரு மிக்ஸியில் ஒன்றாக போட்டு கெட்டியாக, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப்போட்டு நன்கு கிளறவும். கைவிடாமல் கிளறவேண்டும். மிதமான தீயில் இருக்கவேண்டும்.

முதலில் எண்ணெய் சொட சொடவென சத்தத்துடன் கொதிக்க ஆரம்பிக்கும். பின்னர் நேரம் செல்ல செல்ல சத்தம் அடங்கி ஒருவித மணம் வரும். எண்ணையும் தெளிந்துவர ஆரம்பிக்கும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிடவும்.

ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.

இதை தினமும் தலையில்(ஐந்து அல்லது ஆறு சொட்டு) தேய்த்துவர முடி கருமையாக நீண்டு வளரும். முடி உதிர்வதும் கட்டுப்படும்.