பட்டேல் சிலைக்கு எதிராக போராடிய 73 கிராமங்கள்..

பட்டேல் சிலைக்கு எதிராக போராடிய 73 கிராமங்கள்..
ஆயிரக்கணக்கான மக்கள்.. அதிர வைக்கும் மறுபக்கம்!

Nov 1, 2018

காந்தி நகர்: குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு எதிராக நேற்று 73 ஆதிவாசி கிராமங்கள் போராட்டம் நடத்தியது.

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

குஜராத்தின் நர்மதை கரையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கொண்டாடும் நிகழ்வு நேற்று நடந்தாலும், சிலைக்கு எதிராகவும் ஆயிரக்கணக்காக மக்கள் போராட்டம் செய்தனர். இந்த சிலைக்கு பின்பிருக்கும் சோகமான வரலாறு பலருக்கு தெரியாமல் போய்விட்டது.

ஆதிவாசி மக்கள் வசித்த இடம்
இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கும் ராஜ்பிப்லா பகுதியின் நர்மதா அணையை சுற்றிய பகுதிகள் எல்லாமே முழுக்க முழுக்க ஆதிவாசி கிராமங்கள் உள்ள பகுதிகள் ஆகும். 80க்கும் அதிகமான ஆதிவாசி கிராமங்கள் இந்த அணையை சுற்றித்தான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த கிராமங்களில் பாதியை அழித்துதான் ஏற்கனவே நர்மதா அணையை கட்டினார்கள்.

எல்லோரையும் வெளியேற்றினார்கள்

இந்த நிலையில் மீதமுள்ள கிராமங்களில் வசித்த மக்களையும் இந்த சர்தார் சிலையை செய்ய வேண்டும் என்று சொல்லி வெளியேற்றி உள்ளனர். அதாவது சிலையை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் பகுதியை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று கூறி மக்களை வெளியேற்றி இருக்கிறார்கள்.

என்ன செய்தனர் தெரியுமா?

பாருச், சோங்காத், ராஜ்பாப்லா, கேவாடியா, காபா உள்ளிட்ட பல வருட பாரம்பரியம் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த சிலையை சுற்றி பாலம் அமைக்க, சாலை போட என்று 2 லட்சம் மரம் வரை வெட்டி இருக்கிறார்கள். 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்மாறி இருக்கிறது.

வித்தியாசம்

இதை எதிர்த்துதான் குஜராத்தில் மக்கள் போராடி இருக்கிறார்கள். ஆனால் இது பெரிய அளவில் வெளியில் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 73 கிராம மக்கள் இதை எதிர்த்து போராடி உள்ளனர். நேற்று இந்த கிராமங்களில் யாரும் சமைக்கவில்லை. திமுகவினரை போல இவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டுள்ளனர். அதேபோல் பலர் மோடியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

ரத்தத்தை வைத்து எதிர்ப்பு

மிக மோசமான விஷயம் என்னவென்றால் இந்த சிலைக்கு எதிராக வாசகம் அடங்கிய நிறைய போஸ்டர்கள் இந்த கிராமங்களில் இருந்தது. இந்த போஸ்டர்கள் எல்லாம், மக்கள் தங்கள் ரத்தத்தால் எழுதியது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பல ஆயிரம் மக்கள் அந்த கிராமங்களில் உண்ணாவிரதமும் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டனர்

இதன் காரணமாக நேற்று மட்டும் 200 பேர் வரை கைது செய்யப்பட்டனர். 300 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. நிறைய சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனுமதி இல்லை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இன்னொன்று இருக்கிறது. இந்த சிலையை அமைக்கவும், அதற்கு சாலை அமைக்கவும் சுற்றுசூழல் துறையின் அனுமதியை மாநில அரசு வாங்கவில்லை. இந்த அனுமதி இல்லாமல்தான் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.