நல்லவராக இருத்தல் வேறு -சீர்திருத்தப் பணி வேறு

நல்லவராக இருத்தல் வேறு -சீர்திருத்தப் பணி வேறு
===============================================

நல்லவராக இருப்பதற்கும் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது.

நல்லவராக இருத்தல் என்பது நல்ல காரியம்தான். ஆனால் அதில் ஒருவகை பகட்டும் பலவீனமும் உள்ளடங்கி இருக்கும். ஆம். "நான் நல்லவன்..” என்று காட்டுவதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கி இருத்தல் ஒருவகை பகட்டுதான்.

சீர்திருத்தம் என்றுசொல்லி எதிலாவது ஈடுபட்டால் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எதிர்கொள்ள வேண்டி வருமே நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பது ஒருவகையில் பலவீனமே.

பொதுவாக மக்கள், நல்லவர்களையே விரும்புவார்கள். சீர்திருத்தவாதிகளை வெறுப்பார்கள். ஏனெனில் மனம்போன போக்கில் வாழ்பவர்களை சீர்திருத்தம் செய்து நல்வழிப்படுத்துபவர்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. மனித மனோபாவம் இது.

ஆகவேதான் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர் முஹம்மத் என்ற தனிநபரை குறைஷிகள் நேசித்தனர்.. விரும்பினர்.. பட்டப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஏனெனில் முஹம்மத் (ஸல்) என்ற தனிநபர் மிகவும் நல்லவராக இருந்தார்.

அதேவேளை இறைத்தூதராக அனுப்பப்பட்ட பின்னர் பொய்யர், மந்திரவாதி, பைத்தியக்காரர் என்று தூற்றினர்.. வெறுத்தனர். காரணம் முஹம்மத் (ஸல்) இப்போது சீர்திருத்தவாதியாக மாறிவிட்டார்கள்.

முஹம்மத் என்ற தனிநபர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியில் ஓர் அடிமையை விடுதலை செய்தான் அபூலஹப். அதேவேளை அதே முஹம்மத் (ஸல்) அவர்கள் சீர்திருத்தவாதியாக மாறியபோது அவருடைய முகத்தில் மண்ணை அள்ளி வீசினான் அபூலஹப்.

"ஆயிரம் நல்லவர்களைவிட ஒரு சீர்திருத்தவாதியையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று அரபியில் முதுமொழி ஒன்று உள்ளது. ஏனெனில் ஒரு சீர்திருத்தவாதி மூலம் ஒரு சமூகத்தையே அல்லாஹ் பாதுகாக்கின்றான். அதேநேரம் ஒரு நல்லவர் தன்னை மட்டுமே பாதுகாக்கின்றார்.

ஆகவேதான் அல்லாஹ் கூறுகின்றான்: "மேலும் உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில் நியாயமின்றி அழித்துவிடுவதில்லை” (11:117)

இந்த இறைவசனத்தை சற்று கவனியுங்கள். நல்லவர்களாக இருந்தால் என்று கூறவில்லை. மாறாக சீர்திருத்தம் செய்பவர்களாக இருந்தால் என்றுதான் கூறுகின்றான்.

நல்லவராக இருந்தது போதும். சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்!