‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.
ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.
34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது
அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது.