கொலஸ்ட்ரால் குழப்பங்கள்

கொலஸ்ட்ரால் குழப்பங்கள் – 16
--------------------------------------------------------
BY: MUTHURAMAN.G

இன்றும் எனக்கு முன்பே நண்பர் ஆர்வமாக நடைப்பயிற்சிக்கு வந்திருந்தார்.

45 நிமிட வேகமான நடைப்பயிற்சிக்கு பின், பூங்காவின், வட்ட வடிவமான பெஞ்சில் போய் அமர்ந்தோம்.

இரத்தம் உறைவதற்கும், இருதய நோய்க்கும் உள்ள சம்பந்தம் பற்றி சொல்லுங்கள் என்றார் அண்ணாச்சி.

சரி சொல்கிறேன் என்று நான் ஆரம்பித்தேன்.

இரத்தம் உறைவதை பற்றி, நாம் கொஞ்சம் தெரிந்துகொண்டால் ஹார்ட் அட்டாக் எப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

நமது உடம்பில் இரத்தக் குழாய் வெட்டப்பட்டால் அதிக இரத்தம் உடனடியாக வெளியேறும் இதனால் மரணமடையும் நிலை ஏற்படும். இதை தடுப்பதற்கு நமது உடல் ஒரு தனி பாதுகாப்பு வளையம் வைத்துள்ளது. ஒரு வலையை போட்டு இரத்தம் வெளியேறும் வழியை அடைக்கிறது. இரத்தம் உறைதல் நடக்கிறது. மரணத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கிறது.

ஆமாம் இதைப்பற்றி, ஒரு விளையாட்டு வீரர்க்கு இரத்தம் உறையாமல் பிரச்சனை இருப்பதுபோல் ஒரு சினிமா வந்ததே, என்றார் அண்ணாச்சி.

நான் சிரித்துக்கொண்டே ஆமாம் என்றேன். 

இரத்தம் உறைதல், உடலுக்கு வெளியே நடந்தால் சரிதான், இதுவே உடலுக்கு உள்ளே இருதயத்துக்கு போகும் இரத்தக் குழாய்களில் நடந்தால்? இருதயத்துக்கு இரத்தம் போகாது, அடுத்து ஹார்ட் அட்டாக்தான்.

ஆக ஒரு நன்மை செய்வதற்காக இருக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பு இன்னொரு இடத்தில் தீமை செய்வதாக உள்ளது.

இது எப்படி நிகழ்கிறது என்றார் அண்ணாச்சி.

இது கொஞ்சம் சிக்கலான நடவடிக்கை. நாம கொஞ்சம் புரிந்துகொள்வது மாதிரி பார்ப்போம்.

நம் உடலில் காயம் ஏற்பட்டு, இரத்தம் வெளியே வந்தால்,  நம்ம இரத்தத்திலே இருக்கிற ப்ளேட்லட் (platelet) என்ற ஒரு “செல்” இதை உணர்ந்துகொண்டு துரோம்பின் (thrombin) என்ற ஒரு புரதத்தை வெளியேற்றுகிறது. இது பைப்ரின் என்ற புரதத்தை உருவாக்குகிறது. இது வலை ஒன்றை காயம் உள்ள இடத்தில் உருவாக்குகிறது. இந்த வலையில் இரத்தத்திலுள்ள எல்லா செல்களும் சிக்கி விடும். மேற்கொண்டு இரத்தம் வெளியேற முடியாததால் இரத்தம் உறைகிறது.

நம் LDL, எப்படி தீமை செய்யும் LDLயாக மாறுகிறது என்பதை இப்போ பார்ப்போம்.

இரத்தகுழாயின் உள்ளே உள்ள மெல்லிய செல் படலம்தான் எண்டோத்தீலியம். அதற்க்கு கீழே தசை அடுக்கு. இதற்க்கு இடையில் உள்ள பகுதி சப்- எண்டோத்தீலியம். இந்த சப்- எண்டோத்தீலியம் பகுதிதான் பாதிப்பை உண்டுபண்ணும் பகுதி.

எண்டோத்தீலியம் என்பது மிக மெல்லிய செல் படலம். இந்த மெல்லிய படலத்தில் ஊடுருவும் LDL சப்- எண்டோத்தீலியம் பகுதிக்கு வருகிறது. இந்த இடத்தில் LDL ஆக்ஸிடன்ட் பன்னபடுகிறது. இதற்க்கு oxLDL என்று பெயர்.

இப்படி ஆக்சிடைட்LDLதான் தீமை செய்யும் LDL. இது எண்டோத்தீலியம் படலத்தை உள்ளிருந்து உறுத்த ஆரம்பிக்கும்.

இப்படி LDL, oxLDL ஆக மாறாமல் இருப்பதற்கு, எண்டோத்தீலியத்தை பாதுகாப்பதற்கு நமது உடல் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது. எங்கு பாதுகாப்பு பாதிக்கப்பட்டாலும் நம்முடுடைய நோய் எதிர்ப்பு வளையம் செயல்பட ஆரம்பித்துவிடும்.

இங்கே LDL, oxLDL ஆக மாறிய உடன் வெள்ளையணுக்கள் (மோனோசைட்) இதை நோக்கி வருகின்றன.

இங்கே வந்து சேர்ந்ததும், oxLDL ஆக மாறிய LDLஐ விழுங்கி விடுகிறது. அந்த தீமை செய்யும் LDL நீக்கபடுகிறது.
இதேமாதிரி எல்லா நேரங்களிலும் நடைபெறுவதில்லை.

அடுத்தடுத்து LDL, oxLDL ஆக மாறுகிறது. இதை மோனோசைட் விழுங்கிறது. இதற்க்கு ஒரு மோனோசைட் இத்தனை oxLDLதான் விழுங்கவேண்டும் என்ற சரியான FEEDBACK மெக்கானிசம் இல்லை. இதனால் மோனோசைட் நிறைய oxLDL கொழுப்பை விழுங்கி ஒரு கொழுப்பு பிண்டமாக மாறுகிறது. இதற்க்கு போம் செல் என்று பெயர்.

இது எண்டோத்தீலியத்தின் உட்பகுதில் ஒட்டிக்கொண்டு கொழுப்பு கீற்று வீக்கம் அல்லது தமனி தடிப்பு (Atherosclerosis) என்ற குறைபாட்டை உருவாக்குகிறது.
இந்த குறைபாடு மேலும் அதிகமாகிக்கொண்டேபோகிறது. இந்த நாள்பட்ட தமனி தடிப்பு இரத்தகுழாயின் உட்பகுதியை சுருக்கிவிடுகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகிறது. (HIGH PRESSURE).

இதில் அடுத்து வரும் ஒரு செயல்பாடுதான் HEART ATTACK ஐ உண்டுபண்ணும்.

 இந்த தமனி தடிப்பை (Atherosclerosis) நாம் சரி பண்ணமால் விட்டால் இது உடைந்து வெடிப்பை உண்டுபண்ணுகிறது. இதிலிருந்து இரத்தம் வெளியே வருகிறது. இப்படி இரத்தம் வெளியே வந்தவுடன் ப்ளேட்லட் (platelet) தன் வேலையை தொடங்கிவிடும். இரத்தம் உறைதலை உண்டுபண்ணிவிடும். இந்த இரத்த உறைதல் இரத்தகுழாயின் உட்பகுதியை முழுவதுமாக அடைத்துவிடும். இரத்தம் அந்த வழியாக செல்ல முடியாமல் தடுக்கப்படும். இருதயத்துக்கு இரத்தம் போவது தடுக்கபடுவதால் HEART ATTACK ஐ உண்டுபண்ணும்.
  
இந்த வெடிப்பு சில சமயங்களில் சிறு அளவில் இருக்கும்போதே நடந்துவிடும். இது தீடிரென்று நடப்பதால் நமக்கு எந்த விதமான அறிகுறியையும் உண்டுபன்னுவதில்லை.

இதனால் LDL, oxLDL ஆக மாறும்போதுதான் தீமையை உண்டுபண்ணுகிறது.

இந்த LDL, oxLDL ஆக மாறுவதை எப்படி தடுப்பது அல்லது குறைப்பது என்றார் அண்ணாச்சி.

இந்த தமனி தடிப்பு (Atherosclerosis) என்ற குறைபாடு LDL, oxLDL ஆக மாறுவதால்தான் ஏற்படுகிறது என்று பார்த்தோம்.

இப்படி மாறாமல் தடுத்துவிட்டாலே இதிலிருந்து தப்பிவிடலாம்.
இதற்க்கு ஆக்ஸிடன்ட்தான் காரணம். அப்போ இதை தடுப்பதற்கு ஆண்டி-ஆக்ஸிடன்ட் வேண்டும்.
வைட்டமின் இ, இதற்கு நல்ல ஆண்டி-ஆக்ஸிடன்ட்.

இது கொழுப்பில் கரையும் என்பது நமக்கு தெரியும்.
இது செல்களின் உள்ளே இருந்துகொண்டு நம்மை பாதுகாக்கும் ஒரு திறமைவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்.

இது கொழுப்பில் கரையும் என்பதால் LDL கொழுப்புடன் சேர்ந்துகொள்கிறது. LDL எங்கெங்கு போகிறதோ வைட்டமின் இ யும் அதனுடன் சேர்ந்தே போகிறது. LDL ஐ oxLDL ஆக மாறாமல் இந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட் காப்பாற்றுகிறது.

வைட்டமின் சி, இது தண்ணீரில் கரையும் வைட்டமின். இது இரத்தத்தின் பிளாஸ்மாவிலும், திரவத்திலும் இனைந்திருக்கும். இது LDL ஐ இரத்தத்தில் oxLDL ஆக மாறாமல் காப்பாற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது எண்டோத்தீலியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. எண்டோத்தீலியம் நன்றாக இருந்தால்தான் அதிலிருந்து நைட்ரிக் ஆக்சைட் வெளிப்படும், இது இரத்த குழாய்களின் நலத்தை சரிபண்ணும்.
மேலும் வைட்டமின் சி, வைட்டமின் இ யையும், குளுட்டோத்தியானையும் மீண்டும் உண்டுபண்ணும் ஆற்றல் படைத்தது.

குளுட்டோத்தியான் இது செல்களுக்கு உள்ளே உள்ள மிக சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இதய நோய் உள்ளவர்களின் செல்களில் இது குறைவாக உள்ளதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதை அதிகப்படுத்துவதற்கு செலினியம், என்-அசிடில், எல்-சிஸ்டைன், வைட்டமின் பி2, நியாசின் போன்ற ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் தேவை.

பாலி-பீனல்கள் இது LDL, oxLDL ஆக மாறுவதை தடுக்கிறது மற்றும் எண்டோத்தீலியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. (திராட்சை விதை சாறு, சிவப்பு ஓயின்)

CO-ENZYME-Q10 (CQ-10) - இது கொழுப்பில் கரையும். மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட். இதன் வேறு பெயர் யுபிக்குயனான் இதுவும் இதய நோய்க்கு எதிராக செயல்படுகிறது.

அண்ணாச்சி நான் இப்போது சொன்னதையெல்லாம் சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன்.

1. HEART ATTACK பெரும்பாலும் தமனி தடிப்பினால் (Atherosclerosis) ஏற்படுகிறது.
2. தமனி தடிப்பு LDL, oxLDL ஆக மாறுவதால் ஏற்படுகிறது.
3. LDL, oxLDL ஆக மாறுவதற்கு ஆக்ஸிடன்ட்தான் காரணம்.
4. ஆக்ஸிடன்ட் ஆகாமல் தடுப்பதற்கு ஆண்டி-ஆக்ஸிடன்ட் தேவை.
5. வைட்டமின் இ, வைட்டமின் சி, குளுட்டோத்தியான், செலினியம், என்-அசிடில், எல்-சிஸ்டைன், வைலாமின் பி2, நியாசின், பாலி-பீனல்கள், CQ-10 போன்ற ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் வராமல் தடுப்பதற்கு பயன்படுகின்றன.

இந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது உடலிலேயே இருந்தாலும், அவைகள் நமது உடலில் ஆக்ஸிடன்ட்களால் நோய்கள் வராமல் தடுக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டும்தான் ஆக்ஸிடன்ட்களை தடுக்கமுடியும்.

இதை அதிகப்படுத்துவதற்கு ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடவேண்டும்.

ஆக்ஸிடன்ட்களை பின் வரும் காரணங்கள் தூண்டிவிடுகின்றன.
1.அதிகமான மனஅழுத்தம்
2. மாசுபட்ட காற்று (தொழிற்சாலை மற்றும் கார்களின் புகை)
3. மாசுபட்ட தண்ணீர்
4. மாசுபட்ட உணவு
5. காய்கறி, பழங்களின் மேல் தெளிக்கப்படும் மருந்துகள்.
6. பாஸ்ட்புட்
7. புகைபிடித்தல் அல்லது புகை பிடிக்கும்போது பக்கத்தில் இருத்தல்
8. மது அருந்துதல்
9. சூரியக்கதிர் (புற ஊதா)
10. மருந்துகள்
11. எக்ஸ் ரே (கதிர் வீச்சு)
12. அதிகமான உடற்பயிற்சி .

இதில் மனஅழுத்தம் மிகப்பெரிய காரணமாகும். HEART ATTACK அல்லது CANCER வந்தவர்களின் வாழ்க்கையை சற்று திருப்பிபார்த்தால், அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்தவர்களாகவே இருப்பர்கள்.

ஆகவே எந்த பிரச்னைகளாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே அதை அழித்துவிடுங்கள்.

சரி என்ற அண்ணாச்சி, மகிழ்ச்சியோடு கிளம்பி சென்றார்.

BY: MUTHURAMAN.G